திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை மூடி மறைக்க திமுகவினர் பேரம் பேசுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தாயார் அன்னம்மாளுடன் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒரு இளைஞனை போலீஸார் அடித்தே கொலை செய்துள்ளனர். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடி புகார்கள் இருந்தும் ஏன் அவரை கைது செய்யவில்லை. நிகிதா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார். உத்தரவு பிறப்பித்த அந்த உயர் அதிகாரி யார்? அவர் மீது விசாரணை நடத்தப்படவில்லை.
மாநில சுயாட்சி, மாநில உரிமை பேசும் தமிழக முதல்வர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ-க்கு ஏன் வழக்கை மாற்றினார். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா?
எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிபிஐக்கு வழக்கை முதல்வர் மாற்றியுள்ளார். அடித்த 5 காவலர்களிடம் யார் அடிக்கச் சொன்னார்கள் எனக் கேட்டாலே உண்மை தெரிந்துவிடும். உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதற்கே தமிழக முதல்வர் சிபிஐக்கு மாற்றியுள்ளார்.
என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு பணம் கொடுத்து சரிக்கட்டலாம் என நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்” என்று அவர் கூறினார். அதைத் தொடர்ந்து நாதக சார்பில் திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார்.