சென்னை: மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பர் உள்பட பல்வேறு இடங்களில் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில், தெற்கு ரயில்வேயில் கிளைகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத, 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது, ரயில்வே தனியார் மயமாக்குவதை கைவிடுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ரயில்வே கோட்டத்தில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளரும், எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட தலைவருமான பால் மேக்ஸ்வெல் தலைமை வகித்து பேசினார். ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில், அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆர்எம்யூ தலைவரும் ஹிந்த் மஸ்தூர் சபா தலைவருமான ராஜா ஸ்ரீதர் பங்கேற்றார். 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்ஷிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (எஸ்ஆர்இயு) சார்பில், தெற்கு ரயில்வேயின் பல்வேறு கிளைகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயு பொதுச்செயலாளர் ஹரிலால் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்.ஆர்.பி மூலமாக, ரயில்வே காலி பணியிடங்களை நிரப்புவது, 8-வது ஊதியக்குழுவுக்கான விதிமுறை உறுதிசெய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) சார்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் செயல்தலைவர் சூர்யாபிரகாஷ், நிர்வாக பொதுச்செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.