கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. அதன்படி, திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று (ஜூலை 9) முதல் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், ஆலம்பாக்கம் ரயில் நிலைய இரண்டு மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய ஒரு மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் இரண்டு பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆதலால், நாளை (ஜூலை 10) விபத்து குறித்த விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீதமுள்ள 11 பேர் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் நபர்களையும் விசாரணைக்காக அழைப்போம் என குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து தனியாக விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.