‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
‘பைசன்’ படத்தைத் தொடர்ந்து, ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ரமேஷ் வர்மா “துருவ் விக்ரம் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது ‘கில்’ ரீமேக் அல்ல. அடுத்த ஆண்டு காதல் கதை ஒன்றில் அவரோடு பணிபுரிய உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
‘கில்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கொண்டாடப்பட்டு, படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை ரமேஷ் வர்மா கைப்பற்றி உள்ளார். தற்போது வரை இதன் ரீமேக்கில் யார் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகவில்லை. ஆனால், பல்வேறு நாயகர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.