புதுடெல்லி: நாணயங்களை விட அன்றாட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையே பொதுமக்கள் விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை விடவும், ரூபாய் நோட்டுகளுக்கே பொதுமக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் துறையின் பரிசீலனையில் இல்லை. இந்த கணக்கெடுப்பின்போது, எடை மற்றும் அளவு போன்றவை நாணயங்களின் பயன்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க தடைகளாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வை குறைபாடு உடையோருக்கான பயன்பாட்டை எளிதாக்குவதற்காக 50 ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ரோஹித் தண்ட்ரியால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர், 50 ரூபாய் நோட்டுகளில் பார்வை குறைபாடு உடையோரால் அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரமாணப் பத்திரத்தில், ‘2016 மகாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.50 நோட்டுகள் மற்றும் முந்தைய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், பார்வை குறைபாடு உடையோர் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண உதவும் வகையில், 2020-ம் ஆண்டில் MANI என்ற மொபைல் செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அனிஷ் தயாள் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.