சனா: கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டுவிட ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’ (Save Nimisha Priya Council) என்ற அமைப்பு இறுதி முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
‘இது எங்கள் இறுதி முயற்சி’ – ஏமன் நாட்டைச் சேர்ந்தவரான தலால் அப்டோ மஹ்தி என்பவரை நிமிஷா பிரியா கொலை செய்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. தலால் மஹ்தியின் வெட்டப்பட்ட உடல் 2017-ம் ஆண்டு தண்ணீர் தேக்கும் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனை நிறைவேற்றும் துறை சிறை அதிகாரிகளுக்கு ஜூலை 16 மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ள அனுமதியளித்துள்ளது.
இதிலிருந்து நிமிஷா தப்பிக்க உயிரிழந்த தலோல் மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷா தரப்பில் வழங்க தயாராக உள்ள ஒரு மில்லிட்ன் டாலர் இழப்பீட்டுத் தொகையை (ப்ளட் மணி / ரத்தத்துக்கு பதிலாக பணம்) ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னதித்து அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ள காத்திருக்கிறோம். அதுவே எங்களின் இறுதி முயற்சி” என்று சேவ் நிமிஷா பிரியா கவுன்சிலின் உறுப்பினர் சாமுவேல் ஜெரோம் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். நிமிஷாவை மீட்க இந்த கவுன்சில் கிரவுட் ஃபண்டிங் முறையில் ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு நிதியைத் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நிமிஷா பிரியா?: 2011-ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் இருந்து ஏமன் தலைநகர் சனாவுக்கு குடும்பத்துடன் செல்கிறார் செவிலியர் நிமிஷா பிரியா. 2014 வரை அங்கே குடும்பத்துடன் இருந்த நிலையில், நிதி நெருக்கடிகளால் கணவர், மகளை தாயகத்துக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் அங்கேயே பணியைத் தொடர்கிறார். இந்தச் சூழலில் ஏமனில் உள்நாட்டுக் கலவரம் வலுக்க, நிமிஷா பிரியாவுக்கு தாயகம் திரும்புவது கடினமாகிறது. ஆனாலும், பிழைத்தாக வேண்டுமே. வழிகளை, வாய்ப்புகளைத் தேடுகிறார்.
அப்போதுதான் அவர் அங்கு ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து அங்கு ஒரு கிளினிக் திறக்க திட்டமிடுகிறார். ஏமனில் வெளிநாட்டவர்கள் இவ்வாறாக கிளினிக் தொடங்க வேண்டுமானால், சட்டப்படி அந்நாட்டவருடன் இணைந்தே அதைச் செய்ய இயலும். அதனால், தலால் அப்தோ மஹ்தியுடன் கூட்டாக நிமிஷா கிளினிக் ஆரம்பிக்கிறார்
கூடவே, அவருக்கான சிக்கல்களும் ஆரம்பித்துள்ளன. நிமிஷாவின் ஆவணங்களைப் பெற்ற மஹ்தி, தான் அவரைத் திருமணம் செய்து கொண்டது போல் தகவல்களை மாற்றுகிறார். அதுமட்டுமல்லாது நிமிஷாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். நிமிஷா பிரியாவின் கூற்றுப்படி, அவருடைய பாஸ்போர்ட்டையும் மஹ்தி கைப்பற்றிக் கொள்கிறார். கிளினிக்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தையும் சுரண்டிக் கொள்கிறார். இத்தனையையும் எளிதாக சாதிக்க நிமிஷாவை போதை வஸ்துகளைக் கொடுத்து அடிமையாக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிமிஷா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால், மஹ்தி மீது நடவடிக்கை எடுக்காமல் நிமிஷாவை போலீஸார் கைது செய்கின்றனர்.
இப்படி போராட்டங்களுடன் நகர்ந்த நிமிஷாவின் வாழ்வில் 2017-ல் பெரிய துயரம் நேர்கிறது. எப்படியாவது மஹ்தியிடமிருந்து பாஸ்போர்ட்டைப் பெற வேண்டும், கொடூரச் சூழலில் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். சிறைச்சாலை வார்டன் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் சொல்லியபடி மஹ்தியை மயக்கமடையச் செய்துவிட்டு பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு தப்ப வேண்டும் என்பதே நிமிஷாவின் திட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கொடுத்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆகிவிடவே மஹ்தி இறந்துவிடுகிறார்.
தொடர்ந்து நிமிஷா கைது செய்யப்படுகிறார். மஹ்தியின் உடல் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டு அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிமிஷாவுக்கும், அவரது தாயாருக்குமான ஒரே வாய்ப்பு – ஏமன் நாட்டில் ஷாரியா சட்டமே அமலில் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு வழங்கினால் உச்ச நீதிமன்ற மரண தண்டனை தள்ளுபடியாகிவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக ரத்ததுக்கு பணம் பெறுவதை ‘தியா’ ரொக்கம் (diya money) என்று ஏமன் மக்கள் கூறுகின்றனர். இது மட்டுமே இப்போதைக்கு நிமிஷாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
நிமிஷா சிறை சென்றதலிருந்து அவரை மீட்க தொடர்ந்து போராடி வருபவர் அவரது தாய்தான். தன் மகளை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி அங்கேயே தங்கியுள்ளார். அவர் ஏமனைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் என்பவரை மஹ்தி குடும்பத்தினருடன் பேச நியமித்துள்ளர். இந்நிலையில் தான், கடைசி நேர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக சாமுவேல் ஜெரோம் பேட்டியளித்துள்ளார்.