மும்பை: உணவு கெட்டுப்போனதாகச் சொல்லி மும்பை எம்எல்ஏக்கள் கேன்டீன் ஊழியர்களை தாக்கியது குறித்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையில் எம்எல்ஏக்களுக்கான விடுதியில் உள்ள கேன்டீனில் நேற்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்பின்னர், கேன்டீனில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதாக சொல்லி வாக்குவாதம் செய்த சஞ்சய் கெய்க்வாட், அங்கிருந்த ஊழியர்களையும் கடுமையாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சஞ்சய் கெய்க்வாட், “நான் ஒரு போர்வீரன். இதுதான் சிவசேனா பாணி. இது எனது இயல்பான எதிர்வினை. நான் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் பருப்பு, ரொட்டி மற்றும் சாதம் ஆர்டர் செய்தேன். கேன்டீனிலிருந்து வழங்கப்பட்ட பருப்பு மற்றும் சாதத்தை கலந்து சாப்பிட்டேன். முதலில் உணவை வாயில் வைத்தவுடன் ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த வாய் வைத்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது.
அதன்பின்னர், எனது அறையிலிருந்து கேன்டீனுக்கு நடந்து சென்று கேன்டீன் மேலாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர் சரியாக பதிலளிக்கவில்லை, அதனால்தான் தாக்கினேன். இது ஓர் அரசாங்க கேன்டீன் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். நான் மக்களின் பிரதிநிதி. யாராவது ஜனநாயகத்தின் மொழியைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், இதுதான் எனது மொழியாக இருக்கும். இது சிவசேனா பாணி.
பாலாசாகேப் தாக்கரே எங்களுக்குக் கற்றுக் கொடுத்த மொழியை நான் பயன்படுத்தினேன். நான் ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே மற்றும் மல்யுத்தத்தில் ஒரு சாம்பியன். எனக்கு வாள்களையும் பயன்படுத்தத் தெரியும். இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையிலும் நான் கேள்வி எழுப்புவேன்” என்றார்
சஞ்சய் கெய்க்வாட் தனது பேச்சுக்கள் மூலம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். அவர் கடந்த ஆண்டு, ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்து சர்ச்சையை உருவாக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.