இது தொழில்நுட்ப யுகம். தற்காலத் தொழில் நிறுவனங் களின் தேவைக்கு ஏற்ற வகையில் தனித்திறமையுடன் மாணவர்களைத் தயார் செய்வதற்காகப் பல்வேறு பிரத்யேக என்ஜினியரிங் படிப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில் சில படிப்புகள் இதோ:
புரொடக் ஷன் என்ஜினியரிங்: ஒவ்வொரு பொருள் தயாரிப்பும் சிக்கலான தொழில்நுட்ப முறைகளைக் கொண்டிருக்கும். அதனைத் திட்டமிட்டு, முறைப்படுத்தி, தயாரிப்பு முறைகளைச் செயல்படுத்துவது புரொடக் ஷன் என்ஜினியர்களின் வேலை. அதாவது, பொறியியல் தொழில்நுட்பத்துடன் மேலாண்மை தொடர்பான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய பணி இது.
உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை என்பதிலிருந்து, தயாரிப்புக்கான மாதிரிகளை வடிவமைத்து, வீண் செலவுகள் இல்லா மல் சிக்கனமான செலவில் உற்பத்தி செய்வது, அதனைச் சோதனை செய்வது, மதிப்பீடு செய்வது போன்ற பணிகளையும் இவர்கள் செய்ய வேண்டியது இருக்கும். பெட்ரோலிய, இயற்கை எரிவாயு நிறுவனங்கள், வீட்டு வசதிப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங் களில் இந்தப் படிப்பைப் படித்தவர்கள் வேலைவாய்ப்பைப் பெறலாம்.
இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் என்றாலும், தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவுசெய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கணினிக் கட்டுப்பாட்டுக் கருவிகள், உற்பத்தித் திறன் மேம்பாடு, தரக்கட்டுப்பாடு போன்றவை குறித்து இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
அரசுத் துறை நிறுவனங்களிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படிப்பைப் படித்த பிறகு மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்த மாணவர்களுக்குத் தொழில் நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உண்டு.
மைனிங் என்ஜினியரிங்: பூமியின் அடியில் கிடைக்கும் உலோகத்தாது, உலோகம் அல்லாத வேறு பொருட்களிலிருந்து எவ்வாறு உலோகத்தையும் திட எரிபொருளையும் பிரித்து எடுக்கும் முறை குறித்தும் அதற்கான தொழில்நுட்ப உத்திகள் குறித்தும் கற்றுத்தரும் படிப்பு சுரங்கப் பொறியியல் எனப்படும் மைனிங் என்ஜினியரிங்.
இந்தப் படிப்பைக் கற்றுத்தரும் கல்லூரிகள் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும்கூட, இப்படிப்பைப் படித்தவர்களுக்குப் பொதுத் துறை, தனியார் சுரங்க, கனிம வள நிறுவனங்களிலும் புவியியல் துறை அமைப்புகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.
மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங்: குறிப்பிட்ட சில பொறியியல் கல்வி நிறுவனங்களில் மட்டுமே மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் படிப்பு இருந்தாலும்கூட, பொறியியல் படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளில் ஒன்று இது.
உலோகத் தாதுக்களி லிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப்படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில் நுட்பங்கள் மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும். சுரங்க, கனிம நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் மெட்டலர் ஜிக்கல் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங்: மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் படிப்பைப் போல, அது தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு படிப்பு மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங். பயன்பாட்டுக்கு ஏற்ற கருவிகளை அதற்கேற்ற பொருள்களைக் கொண்டு தயாரிப்பது தொடர்பான விஷயங்களைச் சொல்லித் தரும் முக்கியப் படிப்பு இது.
உலோகப் பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகள் குறித்தும் அவற்றின் உள் வடிவமைப்பு, சேர்க்கை, உள்கூறுகள், உலோகங்களை எவ்வாறு பிரித்தெடுப்பது, இதரப் பொருள்களோடு சேர்த்து தொழிற் சாலைகளில் பயன்படுத்துவது என்பது போன்ற பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இதைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
ஒரு பொருள் அதிக வலிமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதே வேளை குறைந்த எடையுடன் இருக்க வேண்டும் என்பது போன்ற தேவைக்கு ஏற்ற கருவிகளை உருவாக்கும் பொறுப்பு மெட்டீரியல் சயின்ஸ் படித்தவர்களுக்கு உள்ளது. எனவே விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், உலோகப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு முக்கியத் தொழில் துறைகளின் ஆய்வுக்கூடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மானுபாக்சரிங் என்ஜினியரிங்: தொழில் நிறுவனங்களில் உற்பத்தி யைக் கண்காணிக்கும் பணியில் மானு பாக்சரிங் என்ஜினியரிங் படித்தவர் களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. தயாரிப்பின் தரம், உற்பத்திச் செலவு குறைப்பு, உற்பத்தி அதிகரிப்பு, உற்பத் திக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள், உற்பத்தி மேலாண்மை…இப்படிப் பல்வேறு அம்சங்களிலும் மானுபாக்சரிங் என்ஜினியரிங் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தப் படிப்பைப் படித்து முடித்த மாணவர்களுக்குத் தொழில் உற்பத்தி நிறுவனங்களிலும் இயந்திர சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங் களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
– pondhanasekaran@yahoo.com