சென்னை: தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்த அறிக்கை: நிர்வாகத் திறனற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழக மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கெல்லாம் விடிவுகாலம் விரைவில் வர உள்ளது.
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அவர்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவுநீர் கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
பொதுமக்கள் ஒன்று கூடி அகற்றிய பின்னரும், ஆளுங்கட்சியின் அலட்சியத்தால் நெமிலிச்சேரி ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது.
குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாமல், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் நாள்தோறும் 5 சிற்றுந்துகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-ல் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதி சார்பில், வரும் 11-ம் தேதி மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.