மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ராகுல் பர்வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்கள் கடந்த 18 மாதங்களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலாவிடம் இருந்து பறித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததையடுத்து அந்த பட்டயக் கணக்காளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் லீலாவுக்கு பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் மற்றும் அதிக சம்பளம் பெறுவதை தெரிந்து கொண்டு திட்டமிட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர்.
மேலும், அவர் பட்டயக் கணக்காளராக வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றக் கோரியும் ராஜ்லீலாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். வேறு வழியில்லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நான், ராஜ் மோர். எனது சாவுக்கு ராகுல் பர்வானிதான் காரணம். அவர் என்னை மிரட்டி பல கோடி ரூபாய் பணத்தை பறித்தார். கடந்த சில மாதங்களாக மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார்.
எனது சேமிப்பு மற்றும் நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணத்தை திருடினார். எனவே என் மரணத்துக்கு ராகுல் பர்வானி, சபா குரேஷி ஆகியோர்தான் காரணம். இவ்வாறு ராஜ் மோர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ் மோர் தாயார் கூறுகையில், “எனது மகனின் அந்தரங்க படத்தை வெளியிடுவேன் என ராகுலும், சபாவும் மிரட்டியுள்ளனர். அவன் சேர்த்து வைத்த பணம் மற்றும் நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து அவர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இதனால் எனது மகன் பல மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்துவந்தான். தற்போது இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டான். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’’ என்றார். இதையடுத்து அந்த இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.