‘பிக் பாஸ்’ சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன், கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்படபலர் நடித்துள்ளனர். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இதை ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ்சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது, “என்னுடைய முதல் படம் சரியாகப் போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டுப் போய்விடலாமா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர், நண்பன் ‘சினிமாவாலா’ சதீஷ். என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி அனைவரிடமும் சிலாகித்துப் பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே உதவுவார்.
இந்தப் பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் அன்பான மனிதர். வெளிநாட்டுப் பாணியில் படங்களை எடுக்கலாமே எனக் கதை சொல்ல வந்தால் இங்கே இருக்கும் சினிமா வேற மாதிரி இருக்கும். தயாரிப்பாளர்களே கிடைக்க மாட்டார்கள்.
அவர் தயாரிப்பாளராக வரும்போதே கதையின் ஒன் லைன் வைத்திருந்தார். ஆனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்ட எல்லாவற்றையும் மறுக்காமல் கொடுத்தார். ராஜு ஜெயமோகன் இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பரிசு. வாழ்க்கையே முடிந்தது, சினிமாவை விட்டுவேறு ஏதாவது வேலைக்குப் போகலாம் என நினைத்தபோது இந்தப் படம் தான் எனக்கு நம்பிக்கை தந்தது” என்றார்.