விழுப்புரம்: பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் இனி நான்தான் கையொப்பமிடுவேன் என கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் நேற்று நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச் செயலாளர் முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கூட்டணி தொடர்பான அதிகாரம் எனக்குத் தரப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்கப்படும் ‘ஏ’, ‘பி’ படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்.
கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். என் வலியை உணர்ந்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். இங்கு நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின் மூலம் உங்கள் சந்தேகங்கள் தீர்ந்திருக்கும். சந்தேகப்பட்டவர்களுக்கு இது மருந்து. இங்கே வந்தவர்களுக்கு இதுவே விருந்து. பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ல் நடைபெறும் பாமக மகளிர் மாநாட்டில் 2 லட்சம் மகளிர் பங்கேற்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அன்புமணிக்கு கண்டனம்: செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கும் கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, பொது வெளியில் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இரட்டிப்பாக வழங்குவது, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ராமதாஸின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
செயற்குழுக் கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைத்து நிலையில் உள்ளவர்களும் பங்கேற்றனர். அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்த காரணத்தால், அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6 பேர் தீக்குளிக்க முயற்சி: செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் ராமதாஸ் தைலாபுரம் திரும்பினார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கார்த்திக், விஜயன், முருகன், ஜெகதீசன், சின்னக்குட்டி ஆகியோர் திடீரென தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராமதாஸ்-அன்புமணி இருவரும் இணைய வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.