வாஷிங்டன்: இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் 14 நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி ஜப்பானுக்கு 25%, தென்கொரியாவுக்கு 25%, தாய்லாந்துக்கு 36%, மலேசியாவுக்கு 25%, இந்தோனேசியாவுக்கு 32%, தென்ஆப்பிரிக்காவுக்கு 30%, கம்போடியாவுக்கு 36%, வங்கதேசத்துக்கு 35%, கஜகஸ்தானுக்கு 25%, துனிசியாவுக்கு 25%, செர்பியாவுக்கு 35%, லாவோஸுக்கு 40%, மியான்மருக்கு 40%, போஸ்னியாவுக்கு 30% வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. அமெரிக்க அரசு கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிவிப்பின்போது இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறும்போது, “பிரிட்டன், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அடுத்ததாக இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளோம். விரைவில் இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக வாஷிங்டனில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்கள், பால் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதை இந்தியா ஏற்கவில்லை.
இரு நாடுகள் இடையே சுமுகமான முறையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியாவில் இருந்து ஜவுளி, மருந்து, நகைகள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாக வாய்ப்பிருக்கிறது. இதேபோல அமெரிக்காவில் இருந்து கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.