புதுடெல்லி: சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனியும், டென்மார்க்கைச் சேர்ந்த டென்ஷிப் & பார்ட்னர்ஸ் நிறுவனமும் இந்தியாவில் இந்த முதலீட்டைச் செய்யவுள்ளது. இந்த முதலீடு நேரடி அன்னிய முதலீட்டுத் திட்டத்தின் (எப்டிஐ) கீழ் செய்யப்படவுள்ளது.
2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய நேரடி அன்னிய முதலீடாகும் இது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த நிறுவனங்கள் இந்தியாவின் கப்பல் தொழில்துறையில் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் கடல்சார் வளமும், வர்த்தகமும் அதிகரிக்கும். அதேநேரத்தில் இந்த முதலீடுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்புகளைப் பெறுவர்.
இந்திய கொடி இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, இங்கு தயாரிக்கப்படும் அனைத்து கப்பல்களும் இந்தியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்படும். இதனால் இந்தியாவின் கப்பல் திறன் திறம்பட விரிவுபடுத்தப்படும். 1979-ல் நிறுவப்பட்ட இன்டர் ஓரியண்ட் நிறுவனம், தற்போது உலகளவில் 100-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைக் கொண்ட குழுவை இயக்கி வருகிறது. மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மிகவும் பிரபல மான பெயர்களில் ஒன்றாக இன்டர் ஓரியண்ட் அறியப்படுகிறது.
டென்மார்க் நாட்டை தள மாகக் கொண்ட டென்ஷிப் & பார்ட்னர்ஸ், உலகம் முழுவதும் கப்பல் துறை சேவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கப்பல் தரகு, வணிக மேலாண்மை, ஆலோசனை உள்ளிட்ட கடல்சார் சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.