சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் 16-ல், 7வது கண்டமாக, வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மலை சிகரத்தில் ஏரி சாதனை படைத்தார்.
இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து நேற்று திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில், உறவினர்கள், நண்பர்கள், பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.