விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்த்து விளையாடினார். இதில் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 104-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் லாரா சீக்மண்டுடன் மோதினார். இதில் அரினா சபலெங்கா 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் நுழைந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 19-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் முதல் 2 செட்களை 3-6, 5-7 என இழந்தார். 3-வது செட் 2-2 என சமநிலையில் இருந்த நிலையில் காயம் காரணமாக டிமிட்ரோவ் விலகினார். இதனால் ஜன்னிக் சின்னர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தின் போது முதல் செட்டில் பேஸ் லைன் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஜன்னிக் சின்னர் கீழே விழுந்தார். இதில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அவர், அதை சமாளித்து விளையாடினார். ஆனால் 3-வது செட்டின் போது டிமிட்ரோவ் நெஞ்சை பிடித்தபடி களத்தில் அமர்ந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிறிது ஓய்வுக்கு பின்னர் களத்துக்கு வந்த டிமிட்ரோவ் தன்னால் போட்டியை தொடர முடியாது, விலகிக் கொள்கிறேன் என அறிவித்துவிட்டு சென்றார்.
10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் 47-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்ஸோ சோனேகோவையும், 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தனர்.