மதுரை: கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், “வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தனியாக இழப்பீடு வழங்கத் தேவையில்லை” என்றார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றிதிபேன், மாரீஸ்குமார், ஆயிரம் செல்வக்குமார், அருண் சுவாமிநாதன், தீரன் திருமுருகன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வாதிடும்போது, “சிபிஐ விசாரணை தாமதமாகும்.
எனவே, வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும். அஜித்குமார் உயிரிழந்த வழக்கு மட்டுமே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராசிரியை நிகிதா அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படவில்லை.
அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அஜித்குமாரின் சகோதரர் உட்பட 3 பேரை போலீஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மாவட்ட நீதிபதி விசாரணை அறிக்கையில் அஜித்குமார் இறப்பு காவல் மரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸாரால் மரணம் ஏற்படுத்தப்படும் வழக்குகளை, அதே போலீஸார் விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது. அந்த வகையில் அஜித்குமார் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நீதிபதி அறிக்கையில், வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இது சிபிஐ விசாரணைக்குப் பெரிதும் உதவும். அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அஜித்குமார் உயிரிழப்பை மாவட்ட நீதிபதியும், தமிழக அரசும் காவல் மரணம் என ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும்.
சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை குழுவுக்குத் தேவையான வசதிகள் மற்றும் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.