திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று ( ஜூலை 8) நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரிதன்யா வழக்கில், குற்றவாளிகளுக்கு தாமதிக்காமல் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று (ஜூலை 8) நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பேசிய நடிகை அம்பிகா, “தற்கொலை சம்பவம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகிவிட்டது. செய்திகளில் பார்த்ததை என்னால் தாங்க முடியவில்லை. என் வீட்டில் இப்படி ஒருவருக்கு நடந்து இருந்தால் என்ன செய்திருப்பேன்? என்று எண்ணும் போது என் மனம் தாங்கவில்லை. அதனால்தான் உங்களை சந்திக்க வந்தேன்.” என்று அவர்களிடம் கூறினார்.
அதற்கு ரிதன்யாவின் தாய் ஜெயசுதா, ”என் மகள் திறமையானவள். மிகுந்த பொறுமைசாலி. பொய் சொல்லி திருமணம் செய்து, என் மகள் வாழ்க்கையை சிதைத்துவிட்டார்கள். திருமணத்துக்கு மாப்பிளை பார்க்கும் வரை, ‘எனக்கு ஒரு இளவரசன் பிறந்துருப்பான்னு சொல்லிட்டே இருந்தா. ஆனா இப்பத்தான் அவன் ஒரு எமன்னு தெரியுது.’ எனச் சொல்லி நடிகை அம்பிகாவிடம் கண்கலங்கினார்.
இதனைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது: சமூகத்தில் ஒரு விலங்கின் உயிருக்கு இருக்கும் மரியாதை கூட மனிதனின் உயிருக்கு இல்லை. ஒரு கொடூரம் நடந்துள்ளது. ஆனால் நடவடிக்கை என்ன? மற்ற நாடுகளில் இருப்பது போன்று, கடுமையான தண்டனைகள் இருந்தால் தான், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழாமல் இருக்கும்.
உங்கள் வீட்டில் இப்படி நடந்திருந்தால் என ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதற்கு தீர்வு காண முடிவு செய்ய வேண்டும். ரிதன்யாவின் கடைசி 5 நிமிடங்களை நினைக்கவே மனம் பதறுகிறது. ரிதன்யா மரணத்துக்கு நாம் வாழும் இந்தச் சமூகமும் ஒரு காரணம். கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தால், குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற மனநிலை மாற வேண்டும். ரிதன்யா வழக்கில், குற்றவாளிகளுக்கு தாமதிக்காமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசு இதில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.