திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை. அதற்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் காலனியாதிக்க மனப்பான்மையிலிருந்து மாற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதியை இன்று (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் கொலை ஒரு கொடூரமான கொலை. இதற்கு காரணம் காவல் துறையின் கலாச்சாரம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட காவல் படை எப்படி மக்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு செயல்பட்டார்களோ, அதே காலனியாதிக்க மனப்பான்மையில் தான் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக இன்னும் காவல்துறை இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்றால் ஒட்டுமொத்த போலீஸாருக்கும் ஒரு மறுபயிற்சி தேவை.
அதே காலனியாதிக்க மனப்பான்மையோடு இன்னும் காவல்துறை நீடித்தால் பெனிக்ஸ், ஜெயக்குமார், விக்னேஷ், அஜித்குமார் என காவல்நிலைய மரணங்கள் தொடரும். போலீஸ் கமிஷன் அறிக்கையையும் படித்தேன். அதில் உளவியல் பயிற்சி, மனநல ஆலோசனை, சட்ட பயிற்சிகளை டிஜிபியிலிருந்து கடைநிலையிலுள்ள காவலர் வரை மறு பயிற்சி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மக்களை பார்த்தாலே அடிக்க வேண்டும், உதைக்க வேண்டும் என்ற ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்ந்த ஜெனரல் டயரின் மனப்பான்மை தொடர்வதால் தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்றால் காவல்துறையில் சீர்திருத்தம் நடக்க வேண்டும். பெனிக்ஸ் ஜெயக்குமார் சம்பவத்திற்குப்பின் காவல்துறையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனை தடுக்க தமிழக அரசு காவல்துறை சீர்திருத்த ஆணையம் அமைத்து உடனடியாக தொழில்ரீதியாக மறுபயிற்சி அளிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் சொந்த வருத்தத்தை தெரிவி்த்துள்ளார். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறார். இதை அரசியல் பிரச்சினையாக கருதவில்லை. எந்த ஆட்சி நடந்தாலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது மாறவில்லை. அதற்கு மாற்றம் வர, டிஜிபியிலிருந்து காவலர் வரை மறுபயிற்சி அளிக்க வேண்டும். காவல்துறையினரை மனப்பரிசோதனை செய்யவேண்டும். நிறைய மன அழுத்தத்தில் உள்ளனர்.
சின்னத் திருட்டுக்கு தனிப்படை விசாரிக்க அவசியம் என்ன?. யார் தனிப்படையை அனுப்பியது என்பதை சிபிஐ விரைவில் விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி நடைபயணத்தில் அவருடன் கொடி பிடித்து நடப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக பாஜக கூட்டணி வரும் தேர்தலில் ஜெயிக்கப்போவதில்லை. போகப்போக அவர் புரிந்து கொள்வார். ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் புல்லட் ரயில் விடுவதாக பாஜக அரசு பெருமைகளை பீற்றிக்கொள்ள சில திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.