ஆம்பூர்: ஆம்பூரில் 4 துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “ஆம்பூரில் 4 துப்பாக்கிகள், கத்திகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிஃப் மற்றும் அவரது சகோதரி ஆஜிரா, தந்தை சையத் பீர் (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் இந்த வழக்கில் பல விவரங்களை மூடி மறைக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக எந்த விவரங்களையும் காவல் துறையினர் வெளிப்படையாக கூறவில்லை.
தான் ஏற்கெனவே பணிபுரிந்த தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கிகளை ஆசிஃப் வீட்டுக்கு கொண்டு சென்றதாகவும், மேலும், இது குறித்து எதுவுமே தனக்கு தெரியாது, நான் அப்பாவி என்று அவர் காவல் துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண தங்க நகைத் திருட்டு விவகாரத்தில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் 4 கைத்துப்பாக்கிகள், கத்திகள் என ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நபரை பிடித்து முழுமையாக விசாரணை நடத்தாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது காவல் துறையினர் உண்மையை மறைப்பதையே காட்டுகிறது.
காவல் துறை இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தாமல் இருப்பது அவர்களுடைய மெத்தனப்போக்கையே காட்டுகிறது. கோவையில் குண்டு வெடித்ததை, சிலிண்டர் வெடித்தது என காவல் துறையினர் மூடி மறைத்தனர். ஆம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் காவல் துறையினர் பலர் தாக்கப்பட்டனர். அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட எஸ்.பி.யும் இந்த நிகழ்வில் தாக்குதலுக்கு உள்ளானார். பொதுச் சொத்துகள், காவல் துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால், அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது, ஆம்பூரில் 4 துப்பாக்கிகள், 3 கத்திகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பல துப்பாக்கிகள், கத்திகளும், பல லட்சம் ரொக்கப் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவரங்களை காவல் துறையினர் வெளிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில் இந்த வழக்கு விவரங்களை கூட ஊடக செய்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊடகங்களுக்கு இந்த வழக்கு சம்பந்தமாக எந்தவித தகவலும், புகைப்படங்களும் வழங்கக் கூடாது என மாவட்ட காவல் துறை தலைமை, ஆம்பூர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் கழிவுப்பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து துப்பாக்கிகளை கொண்டு சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கூறியுள்ள நிலையில் அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினரை விசாரணை வளையத்திற்குள் காவல் துறை கொண்டு வந்துள்ளதா? இல்லை என்றால் அந்த துப்பாக்கிகளை வேறு நபர்களிடமிருந்து வாங்கினாரா? துப்பாக்கிகளை வாங்கி இவர் மற்ற நபர்களுக்கு சப்ளை செய்தாரா என்பது போன்ற விவரங்களையும் காவல் துறையினர் விசாரிக்கவில்லையா என்ற கேள்விகள் தோன்றி காவல் துறையின் விசாரணையில் பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு காவல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆம்பூர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஆம்பூரில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஆம்பூர் பகுதி விளங்குவதால் இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்” என்று வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்டத் தலைவர் வாசுதேவன், நகர தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் சரவணன், சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து விஜய பாரத மக்கள் கட்சி தலைவர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆம்பூர் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் அகில உலக அளவில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
ஆம்பூரில் மத்திய புலனாய்வு அமைப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளனர். ஆம்பூரில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்க தொடங்கியுள்ள விவரம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.