திண்டிவனம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை பாமக செயற்குழு நிறைவேற்றியுள்ளது.
தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில மகளிர் சங்க செயலாளர் வழக்கறிஞர் சுஜாதா தொடங்கி வைத்தார். செயற்குழுக் கூட்டத்தை செயல் தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரத்தை, செயற்குழுவில் ஏகமனதாக வழங்கி உள்ளீர்கள். ஏற்கெனவே நிர்வாகக் குழுவும், அதிகாரத்தை கொடுத்துள்ளது. நமக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்க உள்ளோம்.
வெற்றி வாய்ப்பு உள்ள அனைவரும் விருப்ப மனு கொடுத்து ஆயத்தமாகலாம். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்கப்படும் ‘ஏ’, ‘பி’ படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன். அரசியல் தீர்மானத்தின் மூலம் பல்வேறு சந்தேகங்கள் உங்களுக்கு தீர்ந்திருக்கும். சந்தேகப்பட்டவர்களுக்கு இது மருந்து. இங்கே வந்தவர்களுக்கு விருந்து” என்றார்.
தீர்மானங்கள் என்னென்ன? பாமக செயற்குழுக் கூட்டத்தில், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ‘பொது வெளியில் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, விளை பொருட்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை இரட்டிப்பாக வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.