மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தர்ணா நடத்தியதை மறைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சிக்கு ‘நீதிமன்றத்தை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தக் கூடாது’ என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்புவனம் சந்தை திடலில் நாளை (இன்று) நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். ஆர்ப் பாட்டத்துக்கு அனுமதி கோரி மானாமதுரை டிஎஸ்பியிடம் மனு அளித்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி பி.புக ழேந்தி முன்னிலையில் அவசர மனுவாக விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அரசு தரப்பில், அஜித்குமார் விவகாரம் தொடர் பாக கடந்த வாரம் நாம் தமிழர் கட்சி சார்பில் போலீஸார் அனுமதியுடன் தர்ணா நடத் தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், ஆர்ப்பாட்டம் நடத்த பிற கட்சிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறியதால்தான் இம்மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால், இதே விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கெனவே தர்ணா நடத்தப்பட்டுள்ளது.
அதை மறைத்துவிட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். ஒரே விஷயத்துக்காக வாரந்தோறும் போராட்டம் நடத்துவீர்களா? நீதிமன்றத்தை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தக்கூடாது. நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது. மனு தொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.