வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன.
இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது.
90 நாட்கள் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ஒப்பந்தம் நிறைவேறாத 14 நாடுகளுக்கான கூடுதல் வரி விகிதம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆவணத்தில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு 40% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு 36%மும், வங்கதேசம், செர்பியாவுக்கு 35%மும், இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா & ஹெர்ஜெகோவினா ஆகிய நாடுகளுக்கு 30%மும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா, துனிஷியா, ஜப்பான், தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 25% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு ஜூலை 9-ல் இருந்து ஆகஸ்ட் 1-க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் வெளியான நிலையில் இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “ஆகஸ்ட் 1-ம் தேதிதான் புதிய வரி விதிப்புக்கான காலக்கெடு. ஆனால், அது 100% உறுதியானது அல்ல. தற்போது பட்டியலில் வெளியாகி உள்ள நாடுகளுக்கான இறக்குமதி வரி விகிதம் இறுதியானதுதான் என்றாலும், அது 100% இறுதியானது அல்ல. அந்த நாடுகள் புதிய திட்டங்களுடன் எங்களை அணுகினால், அந்த திட்டம் எங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் நாங்கள் அதை ஏற்போம். நாங்கள் கூடுதல் வரி விகிதத்தை அறிவித்திருப்பதால், எங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் நாடுகள் ஈடுபடுமானால் எங்கள் வரி விகிதம் இன்னும் அதிகரிக்கப்படும்.
நாங்கள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டோம். சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலையை நெருங்கிவிட்டோம். மற்ற நாடுகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.