விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ்பாபு சின்னக்கடை பஜாரில் உள்ள தனது கிளினிக்கில் இரவு நேரத்தில் சிகிச்சை அளித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் அவர் கிளினிக்கை பூட்டும் போது, மர்ம நபர் ஒருவர் ரமேஷ்பாபுவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.
உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவரை கத்தியால் குத்திய ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்த பாண்டிகணேஷ்(38) என்பவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ கழகம் ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி கிளை, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன் இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவரை கத்தியால் குத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.