நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். இதனால் ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமான் பச்சை சாத்தி எழுந்திருந்து திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், ரூபிமனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுக்கிறார்கள்.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாநகரம், வெளிமாவட்ட காவல்துறையினர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலின் உட்புறமும், வெளிபுறமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குற்றங்கள் எதுவும் நடவாமல் தடுப்பதற்காக குற்றப்பிரிவு காவலர்களை கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு ரதவீதிகளிலும் 2 உயர் கோபுரங்கள் அமைத்து குற்றங்கள் எதுவும் நடக்காமல் கண்காணிக்கப்படுகிறது. கோயிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும், காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய ஏனைய விவரங்களையும் அம்மையங்களில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாநகர கட்டுப்பாட்டு அறை எண்கள்.100 மற்றம் 0462-2562651 மற்றும் டவுண் காவல் நிலைய எண். 9498101726-க்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவக்குழு. நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி கோயிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது. சாதி தலைவர்கள் குறித்து எந்தவிதமான கோஷங்களும் எழுப்பக்கூடாது. இதை மீறுபவர்கள் மீதும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ குழு, நடமாடும் கழிப்பறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நெல்லையப்பர் கோவில் வளாகம் முழுவதும், கிழக்குரதவீதி, மேற்குரதவீதி கீழ்புறம், மேற்குமாடவீதி, வடக்குரதவீதி, தெற்குரதவீதி வடபுறம், மார்க்கெட், போலீஸ் குடியிருப்பு, அண்ணாதெரு, தமிழ்சங்கம் தெரு, ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.