சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசிகவில் தேர்தல் பணி என்பது எங்களது களப்பணிகளில் ஒன்று. அதுவே எங்களது முதன்மையான பணி அல்ல.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக, உறுதியுடன் இருக்கிறது. இக்கூட்டணி கட்டுக்கோப்பாகவே தேர்தலை சந்தித்து வெற்றிபெறும்.
தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குறுதிகளை யாராக இருந்தாலும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடியாது. திமுக ஆட்சியில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் சில முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. மறுக்க முடியாதது. அந்தவகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விசிக சார்பில் முதல்வருக்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.