சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரியங்களின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை எளிமையாகவும், விருப்பமாகவும் படிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: இந்த முகாமில், தமிழாசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு இலக்கணம், பாடப்பொருள், செய்யுள், உரைநடை, மதிப்பீடு ஆகிய 5 பகுதிகளாக பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல தனியார் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எங்கள் குடும்பம்தான்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியாகிறது. நமது மாணவர்கள் நம்மைவிட செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடியிடம் தான் அதிகம் கேட்கின்றனர். ஆனாலும், எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு இணையாக இருக்கவே முடியாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள தொழில்நுட்பம் பயன்படாது.
தமிழ் நமது அடையாளம்: தமிழர்கள் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஆய்வகம் தமிழினத்தின் பெருமையை எடுத்துச் சொல்கிறது. இதை நாம் அறிந்தால் மட்டும் போதாது. அதை மாணவர்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டும். நமது மொழியின் பெருமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தமிழில் நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம். இவ்வாறு பேசினார். பயிற்சி முகாம் தொடக்க விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் பெ.குப்புசாமி, இணை இயக்குநர் எஸ்.சுகன்யா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.