சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனிமேல் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் கடந்த ஏப்.29-ம் தேதி நான் பேசும்போது, “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், அந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று குறிப்பிட்டேன்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதி பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ‘N’ மற்றும் ‘A’ என்பதற்கு பதிலாக ‘R’ என பெயர் மாற்றம் செய்து உரிய மரியாதையை கிடைக்க வழிசெய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தினேன்.
கடந்த ஜூன் 25-ம் தேதி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இடையே சாதி, சமூக வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் வன்முறை உணர்வுகள் உருவாவதை தடுக்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அதில் பள்ளியின் பெயரில் சாதி இருக்கக் கூடாது, தனிமனிதர் பெயரில் வைத்திருந்தால் அந்த பெயரோடும் சாதி இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இதை தமிழக அரசு நன்கு பரிசீலித்தது. நமது சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில, நமது மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு துறைகளின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி 2,739 விடுதிகளில் 1.79 லட்சம்பேர் தங்கி பயின்று பயன்பெற்று வருகின்றனர்.
அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது பல்வேறு சாதி சமய பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொது பெயரால் இனி அழைக்கப்படும். மாணர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும்.
இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்த தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும். தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ் சமுதாயத்தை, சமத்துவ சமுதாயமாக கட்டமைக்க இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.