சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 512 மாணவர்கள் பங்கேற்று, விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் சேர 2.49 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கடந்த ஜூன் 27-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 12 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 137 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 363 பேர் என மொத்தம் 512 பேர் நேற்று கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல்நாள் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இடங்களைதேர்வு செய்தனர். அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை நேற்று இரவு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 8) மாலை 5 மணிக்குள் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும். அதன் பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் அவர்களுக்கு வழங்கப்படும்.இதர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.