புதுடெல்லி: பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ (Futures and Options – F&O) வரத்தக முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, “பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு, சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பில் தள்ளுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தை ‘பெரு நிறுவனங்களின் விளையாட்டு’ ஆக மாறிவிட்டது என்றும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் 2024-ஆம் ஆண்டிலேயே நான் தெளிவாகச் சொன்னேன். அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துள்ளதாக தற்போது ‘செபி’ (SEBI) அமைப்பே ஒப்புக்கொள்கிறது. இவ்வளவு காலமாக சேன் ஏன் அமைதியாக இருந்தது?
யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட்டு மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தது? இன்னும் எத்தனை பெரிய சுறாக்கள், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன? மோடி அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிறது என்பதும், சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது என்பதும் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டு தான் வெளியிட்ட இது தொடர்பான எக்ஸ் பதிவையும் தற்போது அவர் இணைத்துள்ளார். அந்தப் பதிவில், “கட்டுப்பாடற்ற எஃப் அண்ட் ஓ வர்த்தகம் 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இவ்வளவு பெரிய பாதகத்தைச் செய்யும் “பெரு முதலீட்டாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ‘ஜேன் ஸ்ட்ரீட்’ இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் விவரம்: அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி சம்பாதித்தது எப்படி?
பங்குச்சந்தை எஃப் அண்ட் ஓ வர்த்தகம்: பங்குச் சந்தைகளில் பங்குகளை வைத்திருப்பவர்களிடம், ஒரு குறிப்பிட்ட எதிர்கால தேதிக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் அந்த பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்வதே ‘எஃப் அண்ட் ஓ’ (Futures and Options) சந்தை வணிகமாகும். அந்தக் குறிப்பிட்ட தேதியில், அந்த குறிப்பிட்ட பங்கின் விலை குறைந்தாலும், ஏறினாலும் அதை வாங்குபவரே அதற்குப் பொறுப்பு.
குறைந்த முதலீட்டில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து, பெரு முதலீட்டாளர்கள் அவற்றை ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு, அதாவது அவர்கள் வாங்கிய தொகையை விட குறைந்த தொகைக்கு வாங்குவது அதிகமாக நடக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பங்கின் விலை தொடர் சரிவை சந்திப்பதால் அச்சம் காரணமாக அவர்கள் தங்கள் பங்குகளை விற்கிறார்கள். இவ்வாறு ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, பின்னர் அதிக விலைக்கு விற்பதை பெரு முதலீட்டாளர்கள் மேற்கொள்கிறார்கள். தங்களின் வணிக நோக்கத்துக்காக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவதற்கும், பின்னர் அவை அதிகரிப்பதற்கும் அவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.