வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்ட நல்லதங்காள் கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அறநிலையத்துறை கோயிலை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ம் தேதி இரவு கோயிலில் உள்ள உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை கீழே சாய்ந்த நிலையில் தலை மற்றும் கைகள் தனியாக உடைந்து கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் பூசாரிகள் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோயில் பூசாரிகளான அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த சுந்தர மகாலிங்கம் (68), கனகராஜ் (32), பரமேஸ்வரன் (50), கருப்பசாமி (21), சுந்தரபாண்டி (23) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய சிலை செய்வது தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் அர்ச்சனாபுரம் கிராம மக்கள், கோயில் பங்காளிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.கோயிலில் நல்லதங்காள் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தக் கோரிய தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அறநிலையத்துறை சார்பில் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் சார்பில் செய்யப்பட்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி சனிக்கிழமை வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் பஜாரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறநிலையத்துறை சார்பில் நல்லதங்காள் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திங்கள்கிழமை பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த கிராம மக்கள் இன்று காலை கோயில் முன் திரண்டனர்.
பாலாலயம் செய்வதற்காக வந்த செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் உள்ளிட்ட அறநிலையத்துறை பணியாளர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத வகையில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.