தொழில் ரீதியாக 10 போட்டி மாநிலங்களில் தமிழ்நாட்டை விட மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி, கட்டணத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் தொழில் போட்டியாக கருதப்படும் 10 மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் தொழில்துறைக்கு மின் கட்டணம் குறைவு என தமிழக மின் வாரியம் தெரிவிக்கிறது. ஆனால் போட்டி மாநிலங்களில் தொழில் தொடங்க நிலம், நிதி, வட்டி மானியம் மட்டும் அளிக்கவில்லை. குறைவான மின் கட்டணத்தை வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
இதுவரை தமிழகத்திற்கு மூலப்பொருட்களை அதிகளவு வழங்கி வந்த மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருவதுடன் அம்மாநில முதல்வர்கள் நேரில் தமிழகம் வந்து தொழில் துறையினருக்கு அழைப்பு விடுப்பதால் கடந்த 5 ஆண்டு காலமாக ஜவுளி, பொறியியல் துறை ஆர்டர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் அடக்க விலைகளை விட 10 சதவீதம் முதல் 18 சதவீதம் குறைவாக வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்குள் இறக்குமதி ஆகி வருவதால் நீண்ட அனுபவம் உள்ள தமிழக உற்பத்தியாளர்கள் நலிவடைந்து வருகின்றனர்.
தற்போது தமிழக உற்பத்தி துறையினரின் எண்ணிக்கையை விட சேவை துறையின் எண்ணிக்கை மூன்று மடங்காக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின் 5 ஆண்டு காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என கூறி 2022-ம் ஆண்டு மின் கட்டணத்தையும், இதர துணை கட்டணங்களையும் அபரிதமாக தமிழக மின்சார வாரியம் உயர்த்தியது.
இதன் அடிப்படையில் நான்கு வருட காலமாக, 2022-ல் 52.6 சதவீதம், 2023-ல் 2.18 சதவீதம், 2024-ல் 4.83 சதவீதம், 2025-ல் 3.16 சதவீதம் என மொத்தம் 62.77 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை விட, இதர கட்டண உயர்வு தொழில் துறையை கடுமையாக நலிவடைய செய்துள்ளது. எச்டி நுகர்வோருக்கு டிமாண்ட் சார்ஜ் (நிலை கட்டணம் ) ஒரு கிலோ வாட் ரூ.350 என இருந்தது, ரூ.550 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 4 வருடத்தில் மேலும் 58 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.608 என ஒரு கிலோ வாட்டுக்கு உயர்த்தி உள்ளனர்.
உதாரணத்துக்கு, 500 கிலோ வாட் வாங்கி இருந்தால் 500×550 = ரூ.3,04,000 ஒரு மாதத்திற்கு தினமும் நிறுவனங்களை இயக்கினாலும், இயக்காவிட்டாலும் ரூ.10,133 செலுத்த வேண்டும். அதேபோல எல்டிசிடி தாழ்வழுத்த மின்சாரத்தை பெற்ற குறு, சிறு தொழில்முனைவோருக்கு 2021-ம் ஆண்டு வரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 செலுத்தப்பட்டு வந்ததை 2022-ம் ஆண்டில் 428 சதவீதம் உயர்த்தி ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.150 என உயர்த்தினர். தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் முன்பு 2021-ம் ஆண்டு வரை 112 கிலோ வாட்டுக்கு ரூ.3,920 செலுத்தினால் போதும். 2025-ம் ஆண்டு முதல் ரூ.18,480 (471 சதவீதம்) கட்டாயம் செலுத்த வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் பயன்படுத்திய மின் கட்டணம் போக, நிலைக் கட்டணத்தையும் சேர்த்து மாத மாதம் ரூ.18,480 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டதால் குறு, சிறு நிறுவனங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிட இயலவில்லை. 112 கிலோ வாட்டுக்கு மேல் 150 கிலோ வாட் வரை வாங்கிய நுகர்வோர் 2022-க்கு பின் எச்டி இணைப்புக்கு இணையாக நிலைக் கட்டணம் மற்றும் உச்ச பயன்பாட்டு நேர (பீக் ஹவர்) கட்டணம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.608 செலுத்துகின்றனர்.
112 கிலோ வாட் வாங்கி இருந்தால் ரூ.18,480 செலுத்த வேண்டும். அதே 150 கிலோ வாட் வாங்குபவர் மாதா மாதம் பயன்படுத்திய மின் கட்டணம் போக தொழில் நிறுவனங்களை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் ரூ.91,200 நிலைக் கட்டணம் செலுத்த வேண்டும். நாட்டில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கட்டணம் இல்லை.
மாநில நலன் கருதி வீடு, விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு வருடம் ரூ.16,000 கோடி மானியமாக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது. சூரிய ஒளி ஆற்றல் திட்டங்களை ஊக்குவித்து, பம்ப்செட் மற்றும் விசைத்தறிகளுக்கு அரசு செலவில் மின் உற்பத்திக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்த நிதியை திரும்ப பெற இயலும். மாநில நிதி செலவினங்களை குறைப்பதுடன் மாநில தொழில் வளர்ச்சிக்கும் உதவ முடியும்.
மின்வாரிய அதிகாரிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என தெரிவிக்கின்றனர். ஆனால் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட தொழில்துறைக்கு மின் கட்டணம் குறைவாக உள்ளது. இது நாட்டிலேயே அதிக தொழில் முனைவோர் உள்ள மூன்றாவது மாநிலமாக உள்ள தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த திட்டமிடும் முதல்வரின் கொள்கைக்கு முரணாக உள்ளது.
எனவே, முதல்வர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின் வாரியத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்கி பிற மாநிலங்களின் மின் கட்டணத்துடன் ஒப்பிட்டு கட்டணத்தை குறைக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.