திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது தற்போது வெளியாகி உள்ளது.
மாத்ருபூமி பத்திரிகை சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 சமூக ஊடக செல்வாக்காளர்களுக்கு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது. அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அவ்வாறு வந்தவர்களில் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள கேரள சுற்றுாலத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ், “கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார். அனைத்தும் வெளிப்படையாகவும் நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.
கேரளாவில் உள்ள இடதுமுன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரச்சாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது.” என தெரிவித்துள்ளார்.
எனினும், கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என அவை கேள்வி எழுப்பி உள்ளன.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேரள சுற்றுலாத்துறையின் விருந்தினராக பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு வந்துள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது. பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள்(கேரள ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் இருப்பதற்கு கேரள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டுகிறார்) ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்களா? சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானாவின் ஹிசார் நகரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, கேரளாவில் தான் எடுத்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலிலும், பிற சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் லாகூர் வீதிகளில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் ஜோதி மல்ஹோத்ரா வீடியோ எடுத்தது வெளியாகி அவருக்கு உள்ள பாகிஸ்தான் தொடர்பை அம்பலப்படுத்தியது. மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தான் சென்றதும் வெளியாகி உள்ளது.