சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், ‘பிரீடம்’. லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மணிகண்டன், மு. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஜய் கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில், சசிகுமார் பேசும்போது, “பிரீடம், மனதுக்கு நெருக்கமான படம். லிஜோமோல் வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாகிவிட்டது. இது, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரி காமெடியாக இருக்காது. இது சிறையில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம். பார்வையாளர்களுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும்.
1995-ல் நடந்த உண்மைக் கதை. 1995 முதல் 99 வரை வேலூர் சிறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் அகதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை சொல்லும் படம் இது. அப்போது நடந்த இந்தச் சம்பவம் பெரிதாக யாருக்கும் தெரியாது. இவ்வளவு மீடியா அந்த காலகட்டத்தில் இல்லை.
இயக்குநர் சத்ய சிவாவின் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவருடைய கதையைத் தான் பார்த்தேன். எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்” என்றார்.