கிரிக்கெட் உலகில் ‘யார் சிறந்த கேப்டன்?’ என்ற விவாதம் எப்போதும் இருப்பது உண்டு. அதில் முன்னவர்களாக இருப்பவர்களில் ஒருவர் தோனி. புள்ளி விவரங்களை எல்லாம் வைத்து பார்த்தால் தோனியை விட பெஸ்ட் கேப்டன்கள் இங்கே இருக்கலாம். ஆனால், அவர்களை காட்டிலும் சிறந்தவர் என தோனியை டேக் செய்யலாம்.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறு நகரத்தை சேர்ந்தவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் தோனி. கிரிக்கெட் கனவுகளுடன் ராஞ்சியில் இருந்து புறப்பட்டு வந்த அவர், பின்னாளில் 140 கோடி மக்களின் கனவை சுமந்த கதையெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான். ஒரு வீரனாக, ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தி வென்று காட்டியவர்.
‘இது நம்ம ஆளு’ என்ற கனெக்ஷனை கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்கும் ஒவ்வொருக்குள்ளும் கடத்தியவர். இத்தனைக்கும் சினிமா படங்களில் வரும் நாயகர்கள் முதலில் அடி வாங்கிக் கொண்டு, அதற்கான பதிலடியை வட்டியும் முதலுமாக தருவார்கள். அப்படித்தான் தோனியும். முதல் சர்வதேச போட்டியில் டக்-அவுட். அதற்கடுத்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
காட்டடி அடித்த தோனி: தனது முதல் சர்வதேச தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இடையே சுமார் 100 நாட்கள் தோனி காத்திருக்க வேண்டி இருந்தது. 2005-ல் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி தனது சர்வதேச என்ட்ரியை பதிவு செய்தார். அந்த போட்டியில் காட்டடி ஆட்டம் ஆடி இருப்பார்.
அன்றைய நாட்களில் அது ஒருநாள் கிரிக்கெட்டில் அரிதான இன்னிங்ஸ்களில் ஒன்றாக அமைந்தது. அதற்கடுத்து அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு தோனி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆனார். அந்த இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை தோனி விளாசி இருந்தார். அது அப்போது சாதனையாக இருந்தது.
2006-ல் பாகிஸ்தான் மண்ணில் கலக்கலான ஆட்டத்தை ஆடி அசத்தி இருந்தார். இந்த தொடரின் போது அப்போதைய பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தோனியை வெகுவாக புகழ்ந்திருந்தார். அவரது ஆட்டம் மற்றும் நீளமான தலைமுடி குறித்தும் பர்வேஸ் முஷாரஃப் பேசி இருந்தார். அது முஷாரஃப் மட்டுமல்ல எல்லோரையும் ஈர்த்திருந்தது.
ஹார்ட் பிரேக்: 2007-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது. அதனால் கொதிப்படைந்த ரசிகர்களில் சிலர் ராஞ்சியில் தோனியின் வீட்டை தாக்கினர். சிலர் அவரது கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினர்.
தோனியே அது குறித்து ஒருமுறை பேசி இருந்தார். “நாங்கள் நாடு திரும்பியதும் போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டோம். நாங்கள் ஏதோ குற்றவாளிகள் போல எங்களை மீடியா வாகனங்கள் சூழ்ந்து கொண்டு வீடியோ பதிவு செய்தன. நான் வாகனத்தில் சேவாக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்த சம்பவம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என தோனி தெரிவித்தார்.
அதன் பின்னர்தான் 2007-ல் டி20 உலகக் கோப்பையை கேப்டனாக தோனி வென்றார். இளம் அணியை வழிநடத்தி வெற்றியை வசப்படுத்தினார். கேப்டனாக அவரது செயல்பாடு வேறு ரகமாக இருந்தது. களத்தில் கூலான அவரது செயல்பாடு அனைவரையும் ஈர்த்தது. அது பலருக்கு களத்துக்கு உள்ளே, வெளியே என நம்பிக்கை கொடுத்தது.
2010 & 2011 கிரிக்கெட் உலகை ஆட்சி செய்த தோனி: கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை தோனி படைத்து உள்ளார். ஆனால், 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தனியொருவராக கிரிக்கெட் உலகை தோனி கட்டி ஆண்டார். அந்த ஆண்டுகளில் தோனி தொட்டதெல்லாம் பொன் ஆனது.
2010-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக தோனி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா பறந்து சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை வென்றார். அதன் பின்னர் 2011-ல் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். வான்கடேவில் இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோனியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் மற்றும் உலக ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மூன்றும் பார்மெட்டிலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். டெஸ்ட் சாம்பியன் பட்டம், ஆசிய கோப்பையும் வென்றார். 2010 மற்றும் 2011 காலகட்டத்தில் சுமார் 700 நாட்கள் தொடர்ந்து ‘நம்பர் 1’ ஓடிஐ பேட்ஸ்மேனாக விளங்கினார்.
பின்னர் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. கடந்த 2019-ம் ஆண்டு இதே ஜூலை மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி விடைபெற்றார். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் – தோனி @ 44