சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி இருப்பது ராஜேந்திர பாலாஜி வட்டாரத்தை திகிலுக்குள் தள்ளி இருக்கிறது.
ஜெயலலிதா அமைச்சரவையில் அவரது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன். 2016-ல் ஆவடியில் போட்டியிட்டு அமைச்சரான இவர், 2021-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். இதையடுத்து சென்னையை விட்டுவிட்டு தனது சொந்த மாவட்டமான விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பினார். இங்கு வந்ததுமே உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் களப்பணியில் இறங்கினார். ஆனால், ராஜேந்திர பாலாஜிக்கு பயந்து பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் பாண்டியராஜனை பார்த்தாலே பயந்து ஓடினார்கள்.
உட்கட்சிக்குள் இப்படியான குடைச்சல்கள் இருந்தாலும் 2024 மக்களவை தேர்தலில் விருதுநகரில் போட்டியிட விரும்பினார் பாண்டியராஜன். ஆனால், சமயம் பார்த்து தொகுதியை தேமுதிக-வுக்கு தள்ளிவிட்டார் ராஜேந்திர பாலாஜி. இதையடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிடலாம் என பாண்டியராஜனுக்கு சமாதானம் சொன்னது அதிமுக தலைமை.
இதையடுத்து சுறுசுறுப்பான பாண்டியராஜன், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தல், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கெடுத்தல் என உற்சாகமானார். விருதுநகர் மாவட்ட அரசியலில் மீண்டும் பாண்டியராஜன் தலை தூக்குவது தனது தலைமைக்கு சிக்கலாகலாம் என கணக்குப் போட்ட ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜனை பொதுவெளியிலேயே எதிர்க்க ஆரம்பித்தார். கடந்த மார்ச் மாதம் விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அதிமுக நிர்வாகியை மேடையிலேயே தாக்கினார் பாலாஜி. அத்துடன், சிவகாசியில் நடந்த கூட்டத்தில் பாண்டியராஜனை பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் விலாசினார்.
ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம், சிவகாசி என தொகுதிகள் மாறி மாறி போட்டியிட்டாலும் நாடார் சமுதாய வாக்குகளே அவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. இதைப் புரிந்து கொண்டு தான் தற்போது தனது நாடார் சமுதாயத்தைக் கையிலெடுத்திருக்கிறார் பாண்டியராஜன். இது அவருக்கான இடத்தை உறுதிசெய்வதுடன், ராஜேந்திர பாலாஜியின் இருப்பையும் தீர்மானிக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடார் சமூகத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், “அதிமுக-வில் இப்போது அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்கள் உள்ளன. இதில், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். நாடார் சமூகத்துக்கு இப்போது 13 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். இதில் அதிமுக காரர் ஒருவர் மட்டுமே. அவரும் இப்போது ஓபிஎஸ் அணியில் இருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நாடார் மகாஜன சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம், நாடார் சமுதாயத்துக்கு கூடுதலாக மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்க வேண்டும். எம்எல்ஏ சீட்களையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திர பாலாஜி கடுமையாக எதிர்த்து வருவது எங்கள் சமுதாய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. இதைப் புரிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, அந்த அதிருப்திகளை எல்லாம் பலவாறு சமாளித்து வருகிறார். பாண்டியராஜனை விமர்சித்த விவகாரத்தில் தனக்கு எதிராக சில அமைப்புகள் அடித்த போஸ்டர்களைக்கூட ஒட்டவிடாமல் தடுத்துவிட்டார் பாலாஜி.
ஏனென்றால், நாடார் சமூகத்தைப் பகைத்துக் கொண்டால் தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும். இது தெரிந்து தான், விருதுநகரில் நடந்த நாடார் உறவின்முறை ஒருங்கிணைப்பு மாநாட்டில் பேசிய பாண்டியராஜன், நாடார் சமூக மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாகப் பேசி இருக்கிறார். வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் பாண்டியராஜனின் இந்த மூவ் பாலாஜி வட்டாரத்தை கலவரமாக்கித்தான் வைத்திருக்கிறது” என்றார்கள்.
இதுகுறித்து மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “நாடார் சமுதாய மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று அந்த சமூகத்துக்கு அதிமுக செய்த நன்மைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டும்படி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன். அந்த வகையிலேயே, நாடார் சமுதாய மக்கள் தங்களுக்கு ஆதரவான கட்சிக்கு ஒருமித்து வாக்களிக்க வேண்டும் எனக் கூறினேன்” என்றார் அவர்.
மாவட்ட அளவில் மைனாரிட்டி சமூகத்தவரான ராஜேந்திர பாலாஜியை வழிக்குக் கொண்டுவர மெஜாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் எடுத்திருக்கும் சாதி ஆயுதம் எந்தளவுக்கு சாதகம் செய்கிறதென்று பார்க்கலாம்!