சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், இழுவை வண்டி மூலம் விமானம் இழுத்து வரப்பட்டு, புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர், பொறியாளர்கள் விமானத்தின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.