கள்ளக்குறிச்சி: பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி பதவி வழங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டினார் ராமதாஸ். இக்குழுவில் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்ட 19 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டு 21 பேர் கொண்ட குழுவாக செயல்படும் என அறிவித்தார். மாற்றியமைக்கப்பட்ட புதிய குழுவில் ராமதாஸ், ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள், பு.தா.அருள்மொழி, தீரன் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் அன்புமணி பெயர் இல்லை.
இதுகுறித்து தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘பாமக தலைமை நிர்வாக குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து அன்புமணி உள்ளிட்ட சிலர் நீக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.