சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று இயங்குகிறது. இங்கு பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் வெளி மாநிலத்தினர். இவர்கள் ஆலை வளாகத்திலேயே தங்கி பணியாற்றுகின்றனர்.
விடுமுறை தினமான நேற்றும் இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது. ஓர் அறையில் பேன்சி பட்டாசுகளுக்கான மருந்தை செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்ததில், 16 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகின. இந்த விபத்தில் பனையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி (47) உயிரிழந்தார். தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் (50), ராஜசேகர் (29), படந்தாலை சேர்ந்த ராஜபாண்டி (37), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ்ராம் (28), ராஜேஷ் (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலகுருசாமியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த 5 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் போலீஸார், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆலை உரிமையாளர் கணேசன், போர்மேன் லோகநாதன் உட்பட 4 பேர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முதல்வர் ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.