மதுரை: உள்ளாட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் மனித நேய மக்கள் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்றார்.
கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான அப்துல்சமது பேசும்போது, “நாட்டில் படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதி நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சதி செய்து பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகிறது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.
மாநாட்டில், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர்ராஜ், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் பேசினர். பேராசிரியர் அருணன், வழக்கறிஞர் ஹென்றிதிபேன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மதுரை பாண்டிகோயில் சந்திப்பு பகுதியிலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநாட்டுத் திடலை பேரணி அடைந்ததும், அங்கு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க, அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கை முடிவெடுத்துச் செயல்படுத்த வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்து, முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. இம்முறை தொடர்வது ஜனநாயகத்துக்கு பேராபத்து. எனவே, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும்.
இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மத்திய பாஜக அரசு கைவிட்டு, நாட்டில் உள்ள இஸ்ரேலிய நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும், வக்பு வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நீண்ட நாள் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவைப் பாதுகாக்கவும், அங்கு அடிப்படை வசதிகளைச் செய்து, மலைப் பாதையைச் செப்பனிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.