மதுரை: தனிப்படை போலீஸார் தாக்கியதில் கொலையான மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29) மீது கோயிலுக்கு காரில் வந்த பக்தர் நிகிதா தனது காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை திருட்டு தொடர்பாக திருப்புவனம் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் திருப்புவனம் போலீஸார் சிஎஸ்ஐ பதிவு செய்து அடுத்தநாள் விசாரணைக்கு வருமாறு அஜித்குமாரை அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையில், தங்க நகை காணாமல் போனது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி அதிகாலையில் மடப்புரம் கிராமத்திற்கு சென்று காவலாளி அஜித்குமார், அவரது சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதில் அஜித்குமாரையும், நவீன்குமாரையும் போலீஸார் அடித்து தாக்கினர். பின்னர் நவீன்குமாரையும், அருண் என்பவரையும் விட்டுவிட்டு, அஜித்குமாரை மட்டும் வேனில் ஏற்றிச் சென்று திருப்புவனம் புறவழிச்சாலையிலுள்ள வலையனேந்தல் கண்மாய் பகுதியில் வைத்து தாக்கினர். பின்னர் அங்கிருந்து அஜித்குமாரை கோயில் அலுவலகம் பின்புள்ள கோசாலையில் வைத்து பிளாஸ்டிக் பைப்பால் அடித்து தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், ஜூன் 28-ல் போலீஸார் தாக்கியதில் உடல், கால்களில் வலி ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு உடற்பரிசோதனைகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி ஜூலை 2-ம் தேதி முதல் திருப்புவனத்தில் காவல் நிலையம் பக்கத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் விசாரணை செய்தார். ஜூலை 5-ம் தேதிவரை சாட்சிகளிடம் விசாரணை செய்தார். இந்த விசாரணையில் அஜித்குமார் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரும் ஆஜராகினர்.
இந்நிலையில் இன்று மதியம் அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி விசாரணையின்போது அடித்து தாக்கியதில் உடலில், காலில் காயங்களுடன் வலி ஏற்பட்டு உடல்நிலை பாதித்தது. இந்நிலையில் இன்று மதியம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மருத்துவமனையில் நவீன்குமாருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது.