சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி (06-07-2025) இன்று காலை 05.30 மணியளலில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது, இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
‘சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்’ மினி மாரத்தானில் பங்கேற்றவர்கள், சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தனர், இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டானர்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசாக காசோலை மற்றும் பதக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினார். பெண்கள் பிரிவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த நபர்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காசோலை மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சத்யபிரதசாகு இ.ஆ.ப, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தக்குமார் இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நுகர்பு பணிகள்) ச.பா.அம்ரித் இ.ஆ.ப., மேயர் திருமதி. ஆர். பிரியா, ஆகியோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள், உள்ளிட்ட அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.