சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்பி மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் என்ற வரிசையில் ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
ஏழை, எளிய குழந்தைகளிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், 50,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 50 மாத கால திமுக ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது திராவிட மாடல் திமுக அரசு. “ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்” என்று சொல்வார்கள். இந்த வகையில் அழிக்கும் பணியினை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதிலும்; சுகாதாரத்தை கற்பிப்பதிலும்; எண்கள், எழுத்துக்கள், வண்ணங்கள் ஆகியவற்றை போதிப்பதிலும்; கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்வதிலும் மிகப் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அங்கன்வாடி மையங்களில் முப்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததே காரணம். காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி மையங்களில் நிலவும் அவல நிலையைச் சுட்டிக்காட்டி நானும் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். ஆனால், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்ற சிந்தனையில் திமுக அரசு இருக்கிறது. தற்போது, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த காலதாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.