சென்னை: மடப்புரம் கோயில் காவலாளியை சித்ரவதை செய்து கொலை செய்த போலீஸாரிடமிருந்து ரூ.1 கோடி வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மும்முரமாகக் களமிறங்கியுள்ள நிலையில், நல்லிணக்கச் சூழலைக் காக்க, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கோயில் காவலர் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில், காவல் வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவல் துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதோடு, சித்திரவதை செய்த காவலர்களிடம் இருந்து ரூ.1 கோடியை வசூலித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும். போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.