வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் ஃபூக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோடாலி தைலத்தை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோடாலி தைலத்துக்கு இறக்குமதிக்கான உரிமம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் சான்று பெற வேண்டும் என ஆக்சென் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடாலி தைலம் அடங்கிய பண்டல்களை யும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து முடக்கி வைத்தனர். அதையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட கோடாலி தைலத்தை விடுவிக்கக் கோரி ஆக்சென் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோடாலி தைலமும் சுங்க கட்டண வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளும் பரிசோதனைக்கு உட்பட்டவையே. மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும் என்பதால் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.
மேலும், ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான பழைய விதிகளில் உரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ள நீதிபதி, பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள கோடாலி தைலத்தை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.