வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், வேளச்சேரி ரயில் நிலைய வளாகம் மேலும் வளர்ச்சியடைந்து, விளையாட்டுகள், உடற்பயிற்சி, உடல்நலம், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய முக்கிய சமூக பயன்பாட்டு மையமாக உருவெடுக்க உள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளியை சென்னை ரயில்வே கோட்டம் கோரியுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்கக் கூடிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களை வழங்கும் விதமாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் இருக்கும் காலி இடங்களை வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாசியம், கூடைப்பந்து, ஷட்டில், கபடி, கேரம், செஸ், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, குத்துச் சண்டை, பளு தூக்குதல், பில்லியர்ட்ஸ் போன்ற பலதரப்பட்ட உள், வெளி அரங்க விளையாட்டுகளை நடத்த அனுமதிக்கப்படும். தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே இந்த விளையாட்டு மையப் பணியில் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த வணிக ஒப்பந்தம் www.ireps.gov.in இணைய முகவரியில் திறந்த ஏல முறையில் நடைபெறு கிறது. ஆர்வமுள்ள ஏலதாரர்கள் மேற்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டு, இந்த மின்-ஏலத்தின் அனைத்து விவரங்கள், வழிமுறைகள் மற்றும் பங்கேற்பதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு, ‘முதுநிலை கோட்ட வணிக மேலாளர் அலுவலகம், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம், சென்னை கோட்டம், சென்னை – 600003’ என்ற முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.