திருமலை: திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் கடைசி நாளன்று ஆனிவார ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்படும். இந்த நாள் மிகவும் விசேஷ நாளாக ஆண்டாண்டு காலமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் ஜூலை 16-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முந்தைய நாளான 15-ம் தேதி, கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனால் 15-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இந்த இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.