திருவள்ளூர்: திருப்புவனம் வழக்கில் தனக்கு தொடர்புடையதாக அவதூறு பரப்பப்படுகிறது என பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதா தலைமறைவான நிலையில், அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நிகிதா அல்ல; தான் தான் என்று தமிழக பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பொன்னேரி காவல்நிலையத்தில் அளித்த புகார் மனு: என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, நிகிதா என அவதூறு பரப்புகின்றனர். இதனால் எனக்கும், தமிழக பாஜகவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.