பர்மிங்காம்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 536 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. கேப்டன் ஷுப்மன் கில் 2-வது இன்னிங்ஸில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசி அசத்தினார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தில் 89.3 ஓவர்களில் 407 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 28, கருண் நாயர் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. கருண் நாயர் 46 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார். தனது 18-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 84 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங்க் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், ஷுப்மன் கில்லுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். ஜோஷ் டங்க் வீசிய 30, 32 மற்றும் 44-வது ஓவர்களில் சிக்ஸர் விளாசி மிரட்டினார் ரிஷப் பந்த். அதேவேளையில் ஷுப்மன் கில், ஜோஷ் டங்க் வீசிய 40 மற்றும் 42-வது ஓவர்களில் சிக்ஸர் விளாசினார்.
தனது 16-வது அரை சதத்தை கடந்த ரிஷப் பந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தை விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் பென் டக்கெட்டிடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா பொறுமையாக விளையாட மறுமுனையில் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய ஷுப்மன் கில் 129 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் தனது 8-வது சதத்தை விளாசினார். முதல் இன்னிங்ஸில் அவர், இரட்டை சதம் அடித்திருந்தார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய 9-வது வீரர் என்ற பெருமையையும் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெயரையும் பெற்றார். இந்திய வீரர்களில் இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 124 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 220 ரன்களும் விளாசியிருந்தார்.
சதம் விளாசிய பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை ஷுப்மன் கில் அதிகரித்தார். 162 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ஜடேஜா ஜோடி 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார்.
83 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 118 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை இங்கிலாந்து எடுத்துள்ள நிலையில் வெற்றியை வசப்படுத்த 536 ரன்கள் அந்த அணிக்கு தேவை.