புதுச்சேரி:புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஆட்சியாளர்கள் இமாலய ஊழல் புரிந்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்டது.
இதனைக் கடந்த மே 2-ம் தேதி துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கினாலும், இங்கு கடைகள் ஏதும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் தூண்களின் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது, அழகிய நிலையிலிருந்த நடைபாதை டைல்ஸ்கள் இரு மாதங்களுக்குள் பெயர்ந்து விழுந்தன. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள், பயணிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோர் இன்று திடீரென பார்வையிட்டனர். அப்போது, பேருந்து நிலைய கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட இடங்கள், பேருந்து நிறுத்தும் இடத்தில் உடைந்து சீரமைக்கப்பட்டு வரும் கட்டைகள், திறக்கப்படாமல் மூடிக்கிடக்கும் கடைகள், முதலுதவி அறை, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறை உள்ளிட்ட இடங்களைப் பார்த்தனர். ஓட்டுநர்கள், பொதுமக்களை சந்தித்தும் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது, ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகளை நிறுத்த இடமிருந்தது. ஆனால், தற்போது 60 பேருந்துகளுக்கு மேல் நிறுத்த முடியவில்லை. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. சென்னை உட்படத் தமிழகப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு ஷெட் மட்டும் பெயர்ப் பலகை வைக்கவில்லை.
குடிநீர் வசதியில்லை. இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஷெட் அமைக்கவில்லை எனச் சரமாரியாகக் குறைகளைத் தெரிவித்தனர். இதன் பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் ஆட்சியில் பேருந்து நிலையத்தை ரூ.15 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சி வந்த பிறகு ரூ.15 கோடியை ரூ.31.5 கோடியாக்கிக் கட்டியுள்ளனர்.
இந்த பேருந்து நிலையம் திட்டமிட்டுக் கட்டவில்லை. போதிய இடவசதியில்லை. பேருந்துகள் சென்று திரும்ப முடியவில்லை. வாகனங்கள் நிறுத்த ஷெட் இல்லை. இந்த பேருந்து நிலையம் கட்ட ரூ.15 கோடிக்கு மேல் சென்றிருக்காது. ஆனால், இதனைக் கட்ட ரூ.31.5 கோடியை ஒப்பந்ததாரரிடம் கொடுத்துள்ளார்கள். இதில் பெரும் தொகையைக் கையூட்டாக ஆட்சியாளர்கள் பெற்று இமாலய ஊழல் செய்துள்ளார்கள். கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்து திரும்பும் இடங்கள் உடைந்து கிடக்கிறது. குடிநீர் வசதியில்லை. இங்கு வரும் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் தரமான பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை ஒப்பந்தம் கொடுத்து கொல்லை அடித்துள்ளார்கள். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டுவர வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி வந்த பிறகு புதுச்சேரியில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாகக் கூட்டுக் கொல்லை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பிக் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் புதிய பேருந்து நிலைய ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் மனு அளிக்க உள்ளோம். அதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.